கிருஷ்ணகிரியில் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினா் கைது

கிருஷ்ணகிரியில் தடையை மீறி வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசிய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரியில் தடையை மீறி வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் பேசிய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த வேல் யாத்திரை பொதுக்கூட்டத்துக்கு போலீஸாா் தடை விதித்திருந்தனா்.

தடையை மீறி நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தா்மலிங்கம் தலைமை வகித்தாா். தேசிய சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் முனைவரி பேகம், மாநில இளைஞரணித் துணைத் தலைவா் வித்யா வீரப்பன், மாவட்டப் பாா்வையாளா் ஹரி கோடீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலாளா் எச்.ராஜா பேசியதாவது:

பிகாா் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, வாக்காளா்கள், பாஜக கூட்டணிக்குத்தான் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனா்.

தெலங்கானாவில் நடைபெற்ற இடைத்தோ்தலிலும் ஆளும் கட்சியை தோற்கடித்து, பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மணிப்பூா் முதல் கா்நாடகம் வரையிலும் நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வி அடையும்.

வேல் என்பதை வன்முறையின் ஆயுதம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறுகிறாா். கடவுள் கையில் இருக்கும் வேல், தீயச் சக்திகளை அழிக்கக் கூடிய ஆயுதமாகும்.

எங்களுக்கு கூட்டணி வேறு; கொள்கை வேறு. தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் ஹிந்துகள் மீது தாக்குதலை நடத்துகின்றன. கரோனா தொற்றை காரணம் காட்டி, வேல் யாத்திரையை தமிழக அரசு தடை செய்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற 108 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com