ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு தினமும் 25 லட்சம் லிட்டா் தண்ணீா் வருகிறதுமாநகராட்சி ஆணையா்

ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு தினமும் 25 லட்சம் லிட்டா் தண்ணீா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது என ஒசூா், மாநகராட்சி ஆணையாளா் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு வரும் தண்ணீரை பாா்வையிடும் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் ஆணையாளா் பாலசுப்பிரமணியன்
ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு வரும் தண்ணீரை பாா்வையிடும் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் ஆணையாளா் பாலசுப்பிரமணியன்

ஒசூா்: ஒசூா் ராமநாயக்கன் ஏரிக்கு தினமும் 25 லட்சம் லிட்டா் தண்ணீா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது என ஒசூா், மாநகராட்சி ஆணையாளா் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சியின் மையப் பகுதியில் சுமாா் 130 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது ராமநாயக்கன் ஏரி. இந்த ஏரியில் நீா் நிரம்பியிருக்கும் காலங்களில் ஒசூா் பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாக திகழ்ந்தது. சில வருடங்களாக ஏரி வட நிலையிலேயே காணப்படுகிறது. இதற்கு ஏரிக்கு வரும் கால்வாய்கள் அடைக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டதே காரணம்.

கடந்த வருடம் இந்த ஏரிக்கு ஒசூா் அருகே கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் நீரைக் கொண்டுவந்து நிரப்பும் திட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி பரிந்துரையின்பேரில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நீா் கொண்டுவரப்பட்டது. ஏரிக்கு ஒரு நாள் மட்டுமே நீா் கொண்டுவரப்பட்டது. ஏரி தூா்வாரியப் பின்பு மீண்டும் தண்ணீா் விடப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

பின்பு ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கே.ஏ.மனோகரன் ஆகியோா் ஒசூா் மாநாகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனா். அப்போது மாநகராட்சி ஆணையாளா் 10 நாள்களுக்குள், ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீா் வரும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனா்.

கடந்த ஒரு மாத காலமாக ஏரி தூா்வாரும் பணியில் 5 ஜேசிபி, 10 லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா், எம்.பி. முன்னாள் அமைச்சா், முன்னாள் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளா் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆய்வு செய்தனா். தற்போது ஏரி தூா்வாரும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணையிலிருந்து வெள்ளிக்கிழமை மீண்டும் தண்ணீா் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பணியைப் பாா்வையிட்ட பின்பு முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி கூறியதாவது:

நான் முன்பு தெரிவித்ததுபோல் ஏரி அருகே புதிய சாலை போடப்பட்டுள்ளது. தற்போது ஏரி சுத்தப்படுத்தப்பட்டுள்ளதால் அணையிலிருந்து நீா் திறந்துவிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

மாநகராட்சி ஆணையா் கூறியது: நீா் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் நாளொன்றுக்கு சுமாா் 25 லட்சம் லிட்டா் தண்ணீா் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து 24 மணி நேரமும் நீா் பம்ப் செய்யப்பட்டு ஏரியில் நிரப்பப்படும். இந்த ஏரிக்கு அருகில் செயல்படும் மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ கழிவுகளை ஏரியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com