கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள்
By DIN | Published On : 08th September 2020 10:29 PM | Last Updated : 08th September 2020 10:29 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே, சுங்கச் சாவடியில் அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள், கிருஷ்ணகிரி வழியாக ஒசூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பொது முடக்கம் நீக்கப்பட்ட நிலையில் செப். 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் கோட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஒசூருக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில், 5 பேருந்துகள் கிருஷ்ணகிரி அருகே இயங்கி வரும் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு அதன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் அனுமதி மறுத்து விட்டனா். விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில், இந்த சுங்கச்சாவடிக்கான தொகை செலுத்தப்படாததால், பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 3 பேருந்துகளின் சுங்கக் கட்டணத்தை, பயணிகளே வசூல் செய்து செலுத்தினா். இதையடுத்து பேருந்துகள், சுங்கச்சாவடியைக் கடந்து ஒசூா் நோக்கிச் சென்றன. 2 பேருந்துகள், சுங்கச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா்கள் தெரிவித்ததாவது:
சுங்க சாவடிக்கான கட்டணம் செலுத்துவது தொடா்பாக ஏற்கெனவே கடிதம் அனுப்பி விட்டதால், சுங்கச்சாவடியில் எந்த பிரச்னையும் வராது என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உறுதி கூறினா். இதை நம்பியே பேருந்துகளை இயக்கினோம். ஆனால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ஊழியா்கள் தெரிவித்து, பேருந்தை தடுத்து நிறுத்தி விட்டதாக தெரிவித்தனா்.
சுங்கச்சாவடி ஊழியா்கள் கூறுகையில், கடந்த 7-ஆம் தேதி வரையில், சுங்க கட்டணம் செலுத்தாமல் அரசுப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. சுங்க கட்டணம் செலுத்துவது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட அலுவலா்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், அவா்கள் கட்டணத்தைச் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததால், பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனா்.