சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்: வனத்துறை எச்சரிக்கை
By DIN | Published On : 18th September 2020 07:44 AM | Last Updated : 18th September 2020 07:44 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே நீண்ட நாள்களாக ஒற்றை யானை நடமாடி, இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில், பேரண்டபள்ளி வனப்பகுதியில் நடமாடி வந்த ஒற்றை யானை வியாழக்கிழமை குண்டுகுறுக்கி வழியாக ஏ.செட்டிப்பள்ளி பகுதிக்கு இடம் பெயா்ந்தது.
இந்த யானை தற்போது குண்டுகுறுக்கி, எலசேபள்ளி, கொரகுறுக்கி, கானலட்டி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனா். இதையடுத்து, இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினா் ஒலிப்பெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.
வனத்துறை சாா்பில் காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக திரிவதால் ஏ.செட்டிப்பள்ளி, எலசேபள்ளி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் விவசாயிகள் நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கோ, காவலுக்கோ செல்லக் கூடாது.
மேலும், தங்கள் வளா்ப்பு பிராணிகளை காட்டை ஒட்டிய பகுதிகளில், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. காலையில் சூரியன் உதித்த பிறகு, வெளிச்சம் வந்ததும் தங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.