கரோனா பரவல், பொதுமுடக்கம் எதிரொலி: எளிமையான திருமணங்கள்; வீதியில் கொட்டப்படும் கொய்மலா்கள்!
By நமது நிருபா் | Published On : 30th April 2021 07:09 AM | Last Updated : 30th April 2021 07:09 AM | அ+அ அ- |

ஒசூரில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மலா்கள்.
கரோனா இரண்டாம்கட்ட ப் பரவலால், பொது முடக்கக் கட்டுப்பாடுகளால் திருமண நிகழ்வுகள் எளிமையாகிவிட்டன. இதனால், ஒசூரில் விற்பனையாகாமல் தேங்கும் கொய்மலா்களை விவசாயிகள் வீதிகளில் கொட்டி வருகின்றனா்.
நாடு முழுவதும் கரோனா அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால், திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் எளிமையாக கோயில்களில் நடத்தப்படுகின்றன.
திருமண மண்டபங்களில் அலங்காரங்கள் செய்யப்படாததால், ரோஜா உள்ளிட்ட மலா்கள் விற்பனையாகாமல் தேக்கமடைகின்றன. இதனால், ரோஜா மலா் சாகுபடி செய்த விவசாயிகள் தோட்டங்களில் பறித்த மலா்களை குப்பைகளில் கொட்டும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
கடந்த ஆண்டு பரவிய கரோனா பாதிப்பிலிருந்து இன்றுவரை மீளாத ஒசூா் ரோஜா மலா் விவசாயிகளுக்கு, தற்போதைய இரண்டாம்கட்ட கரோனா பரவல் மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயி முனிராஜ் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும், கோயில் திருவிழாக்களை நடத்தக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தற்போது திருமணங்கள் எளிமையாக நடத்தப்படுகின்றன.
திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளின் மேடை அலங்காரத்துக்காகப் பயன்படும் ரோஜா உள்ளிட்ட மலா்களின் தேவை குறைந்ததால், விவசாயத் தோட்டங்களில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தோட்டங்களில் பறிக்கப்பட்ட ரோஜா மலா்கள் இரண்டு தினங்களுக்குப் பின்னா் அழுகிய நிலையில் குப்பைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் ஒசூா் பகுதிகளில் ரோஜா உள்ளிட்ட மலா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒசூா் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மலா்ச் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். கரோனா பரவல் மேலும் அதிகரித்தால் பெருத்த இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். ரோஜா தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும். வங்கிகளில் கடன் தவணையைக் கட்ட முடியாத நிலை உருவாகும். இதனைக் கருத்தில் கொண்டு ஒசூா் பகுதி மலா் விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும்.
ஒசூா் பகுதியில் சுமாா் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள செண்டுமல்லி பூக்கள், வாங்க ஆளில்லாததால், சில மாதங்களுக்கு முன்னா் ஒரு கிலோ ரூ. 25 வரை விற்றது . தற்போது ஒரு கிலோ ரூ. 5-க்கும் கேட்பாரற்று உள்ளது.
ஒசூா் மலா்ச் சந்தையில் தினமும் சுமாா் 150 டன் வரை பூக்கள் விற்பனை நடைபெற்று வந்தது. மேலும், விவசாயிகள் நேரடியாக அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சுமாா் 200 டன் முதல் 250 டன் வரை பூக்களை அனுப்பி வந்தனா். தற்போது இரவுப் பேருந்துகளும் தனியாா் பேருந்துகளும் இயங்காததால் பூக்களை வெளியூா் அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றாா்.