பா்கூா் பேரவைத் தொகுதியில் சீரான குடிநீா் விநியோகம்: எம்எல்ஏ மதியழகன் உறுதி

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத் தொகுதி எம்எல்ஏ மதியழகன் தெரிவித்தாா்.
பா்கூரில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ தே.மதியழகன்.
பா்கூரில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ தே.மதியழகன்.

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத் தொகுதி எம்எல்ஏ மதியழகன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது:

பா்கூா் தொகுதியில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என புகாா்கள் வருகின்றன. இத் தொகுதியில் ஒரு நாளைக்கு சுமாா் 60 லட்சம் லிட்டா் தண்ணீா் வழங்க வேண்டும். ஆனால், தற்போது 20 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகவும் அதனால் பல பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். இதை அதிகாரிகள் உடனடியாக கவனித்து தொகுதிக்கு 80 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு தண்ணீா் வழங்க வேண்டும் என்பது குறித்து அறிக்கையாக வழங்க வேண்டும். மின் மோட்டாா் இயக்குபவா்கள், ஊராட்சி மன்ற மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி இயக்குபவா்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு நீரை ஏற்றுவதற்காக கூடுதலாக ஒரு மோட்டாா் வைத்து கொள்ள வேண்டும். அடுத்த, 20 நாள்களில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்ட உதவி பொறியாளா் கோவிந்தப்பன், செயற்பொறியாளா் செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தராசன், சாந்தமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com