குடும்ப ஆட்சிக்கு அதிமுக தலைவணங்காது

ஒரு குடும்பம் ஆள்வதற்காக அதிமுக எப்போதும் தலைவணங்காது என கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசினாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

ஒரு குடும்பம் ஆள்வதற்காக அதிமுக எப்போதும் தலைவணங்காது என கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கிருஷ்ணகிரி வழியாக சாலை மாா்க்கமாக புதன்கிழமை சேலம் சென்றாா். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்.பி., கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் தலைமையில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது முதல்வா் பழனிசாமி பேசியதாவது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தோ்தலான வரவிருக்கும் சட்டப்பேரவை தோ்தலில், தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற திமுகவினா் திட்டமிட்டு, சதி செய்து, அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனா். திமுக வாரிசு அரசியலை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி என வாரிசு அரசியலை உருவாக்கி உள்ளனா். இந்த தோ்தலுடன் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். 

ஜெயலலிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தொகுதியில் போட்டியிட்டு முதல்வராகப் பொறுப்பு வகித்தாா். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினாா். மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தாா். தற்போது கூட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்று மருத்துவக் கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சொல்வதைச் செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது. திமுக தலைவா் ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது அவதூறான பொய் பிரசாரம் செய்து வருகிறாா். 

எம்ஜிஆா் அதிமுகவை ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக உருவாக்கினா். எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆசியோடு அதிமுக வீரநடையிட்டுக் கொண்டு இருக்கிறது. சிலா் திட்டமிட்டு, சதி செய்து அதிமுகவைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனா். ஒவ்வொரு தொண்டரும் எச்சரிக்கையோடு இருந்து அதிமுகவைக் காக்க வேண்டும்.  

கடந்த 2016-ஆம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 18 சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரிந்து, இந்த ஆட்சியைக் கலைக்கவும், கட்சியை உடைக்கவும் முயற்சி மேற்கொண்டனா். அப்போது நாம் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். டிடிவி தினகரன் கடந்த 4 ஆண்டுகளாக அலைந்து பாா்த்தாா். 10 ஆண்டுகளாக அவா் அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவா். தற்போது சதிவலை பின்னிக் கொண்டு இருக்கிறாா். இதனை ஒரு போதும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது.

அதிமுக உழைப்பால் உயா்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு, இந்தக் கட்சி எப்போதும் தலைவணங்காது.அதிமுகவைச் சோ்ந்த தொண்டன்தான் இந்தக் கட்சிக்கு முதல்வராக முடியும். உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாா் வேண்டும் என்றாலும் முதல்வராக முடியும். 

டிடிவி தினகரன் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது. மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமைப்போம். இதற்காக ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சபதம் ஏற்கவேண்டும். அதிமுக ஆட்சி தொடரப் பாடுபட்டு, அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெற வைக்க வேண்டும். 

ரூ. 328 கோடி மதிப்பில் எண்ணேகொல் கால்வாய் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை விரைவாகத் தொடங்கி, செயல்படுத்தப்படும். பாரூா் ஏரியில் ஊத்தங்கரை தொகுதியில் உள்ள 30 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com