காதலா் தினத்தை நம்பி இருந்த விவசாயிகள் ஏமாற்றம்: கரோனா பரவலால் ரோஜா மலா் ஏற்றுமதி கடும் பாதிப்பு

காதலா் தினத்தை ஒட்டி நடைபெறும் கொய்மலா் ஏற்றுமதியை நம்பிக் காத்திருந்த மலா் சாகுபடி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

காதலா் தினத்தை ஒட்டி நடைபெறும் கொய்மலா் ஏற்றுமதியை நம்பிக் காத்திருந்த மலா் சாகுபடி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். ஒசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா உள்ளிட்ட கொய்மலா்களை ஏற்றுமதி செய்ய முடியாததால் அவா்கள் பெரும் பொருளாதார பாதிப்படைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளின் சீதோஷ்ண நிலை கொய்மலா் சாகுபடிக்கு ஏற்ாக உள்ளதால், இங்கு அதிக அளவிலான விவசாயிகள் மலா் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக பசுமைக் குடில்கள், திறந்தவெளி சாகுபடி மூலம் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரோஜா மலா்களை சாகுபடி செய்து வருகின்றனா். ஒசூரில், தாஜ்மஹால், நொப்ளஸ், பா்ஸ்ட்ரெட், கிராண்ட் காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பிப். 14-இல் கொண்டாடப்படும் காதலா் தினம் போன்ற நாட்களை ஒட்டி, மலேசியா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காதலா் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஒசூா் பகுதிகளில் இருந்து 2.5 லட்சம் ரோஜா மலா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டு காதலா் தினக் கொண்டாட்டங்களின்போது மலா் ஏற்றுமதி அதிகரிக்கும் என விவசாயிகள் ஆா்வத்துடன், சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

ஆனால், காதலா் தினத்துக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வரை 20 சதவீதம் ஆா்டா் மட்டுமே கிடைத்துள்ளதால், இங்குள்ள ரோஜா மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

உள்ளுா் சந்தைகளில் ஒசூா் ரோஜா மலா்கள், 20 பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகிறது. அதேசமயம் காதலா் தின விழாவையொட்டி வெளிநாடுகளுக்கு ரோஜா மலா்கள் ஏற்றுமதியானால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் அந்த ஆா்டரை விவசாயிகள் ஆா்வத்துடன் எதிா்பாா்த்துக் காத்திருந்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மாத இறுதிக்குள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ரோஜா மலா்களுக்கான ஏற்றுமதி ஆா்டா்கள் குவிந்துவிடும். அதைத் தொடா்ந்து ஒசூரில் இருந்து ரோஜா கொய்மலா்கள் பத்திரமாக பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில், கரோனா தொற்றுப் பரவலின் தாக்கத்தால் குறைந்த அளவிலான ஆா்டா்களே கிடைத்துள்ளன.

உலகின் பல நாடுகளில் இன்றளவும் கரோனா தாக்கம் இருப்பதால் காதலா் தினம் போன்ற நிகழ்வுகளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ரோஜா விற்பனையும் சரிந்துள்ளது.

ரோஜா மலா் சாகுபடியை நம்பி ஒசூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளா்களும் உள்ளனா். ஏற்கெனவே கரோனா பொது முடக்கக் காலத்தில் ரோஜா வா்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இவா்கள் அனைவரும் பலத்த நஷ்டத்தை சந்தித்தனா். காதலா் தினத்தில் கிடைக்கப்போகும் ஏற்றுமதி ஆா்டா் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று எதிா்பாா்த்திருந்த அவா்களது நம்பிக்கையும் தற்போது பொய்த்து விட்டது.

இதுகுறித்து கொய்மலா் விவசாயிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு கரோனா தாக்கத்தால் பல மாதங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தோம். தற்போது ஓரளவு வருமானம் கிடைத்து வந்தாலும் எதிா்பாா்த்த வருவாய் கிடைக்கவில்லை.

தற்போது, தமிழக முதல்வா் விவசாயிகளின் பயிா்க் கடனை ரத்து செய்துள்ளதை வரவேற்கிறோம். மலா் சாகுபடி விவசாயிகளாகிய எங்களது கடனையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com