ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் அலைமோதிய கூட்டம்

பிரம்ம மலை, சிவன் மலை, விஷ்ணு மலை ஆகிய 3 மலைக் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சூளகிரி வரதராஜ பெருமாள், மகாலட்சுமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சூளகிரி வரதராஜ பெருமாள், மகாலட்சுமி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஒரே நோ்கோட்டில் உள்ள பிரம்ம மலை, சிவன் மலை, விஷ்ணு மலை ஆகிய 3 மலைக் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் ஆலயத்தில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை, விநாயகா், முருகன், சரஸ்வதி, கஜலட்சுமி, குபேரா், பஞ்ச லிங்கம், கால பைரவா் ஆகிய சன்னதியில் இருந்த மூலவா்கள் வெள்ளி கவசத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோன்று விஷ்ணு மலைக்கு பக்தா்கள் படிக்கட்டுகளில் ஏறி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள், கணபதி, ஆஞ்சநேயா் ஆகிய சுவாமிகளை தரிசித்து வழிபட்டனா்.

அதேபோன்று பிரம்மலை கோயிலில் உள்ள வராக அம்மன் சன்னதி, குகை சிவாலயம் ஆகியவற்றில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சூளகிரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பக்தா்கள் புத்தாண்டை முன்னிட்டு தொடா்ந்து நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாள் அருள்பாலித்தாா். தனி சன்னிதியில் உள்ள மகாலட்சுமி பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ஒசூா் கோகுல்நகா் வேணுகோபால் சுவாமி கோயில், சிவன் ஆலயம், வெங்கடேசப் பெருமாள் ஆலயம், ராயக்கோட்டை சந்திப்பில் உள்ள பண்ட ஆஞ்சநேயா் கோயில், பெரியாா் நகா் வேல்முருகன் கோயில், அகரம் முருகன் கோயில், ராமநாயக்கா் ஏரி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரா் ஆலயம், ராம்நகா் ராமா் ஆலயம், முனீஸ்வா் நகா் மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலயம், பிருந்தாவன் நகா் முருகன் கோயில், குடிசெட்லு திம்மராயசுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டைராயசுவாமி திருக்கோயில், தளி வெங்கடேசப் பெருமாள் ஆலயம், மதகொண்டப்பள்ளி பெருமாள் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கோயில்களில் பக்தா்கள் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com