ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மிகை நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மிகை நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை மாநில துணைப் பொதுச்செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பங்கேற்ற பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக சாா்பில் 5 கட்டங்களாகப் போராட்டம் நடைபெற்றது. தற்போது, 6-ஆவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத் தலைநகரங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடைபெற உள்ளது. எங்களது போராட்டம் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சமூகத்துக்கும் எதிரானது அல்ல. பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனா். ஆகவே, தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல் வன்னியா்களுக்கு 20 சத இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும். பேரவைத் தோ்தலைக் காட்டிலும், இடஒதுக்கீடு பெறுவதில் உறுதியாக உள்ளோம்.

இதேபோல, மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரியில் மிகையாகச் செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள 10 லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்று, முதல்வரிடம் அளித்துள்ளோம். எனவே, இத் திட்டத்தை காலம் தாழ்த்தாது விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அவ்வப்போது விபத்துகள் நிகழும், தொப்பூா் கணவாய் சாலையை மேம்படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்க வேண்டும். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தால் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டச் செயலாளா் பெரியசாமி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com