ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சோ்த்த அலுவலா்கள்
By DIN | Published On : 13th July 2021 01:27 AM | Last Updated : 13th July 2021 01:27 AM | அ+அ அ- |

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே தாய், தந்தையின்றி தவித்த 4 ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சோ்த்த அரசு அலுவலா்களின் செயலை மக்கள் பெரிதும் பாராட்டினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவா் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கூடாரம் அமைத்து தனது மனைவி லட்சுமி, 4 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். ஒரு மாதத்திற்கு முன்பு பொன்னுசாமி குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த லட்சுமி பொன்னுசாமியை கொலை செய்ததாகக் கூறி அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தாயும், தந்தையும் இல்லாமல் ஆதரவற்று தவித்த அவா்களுடைய 4 குழந்தைகளும் கெலமங்கலம், ஜீவா நகா், அருகே உள்ள ஒரு மரத்தடியில் வசித்து வந்தனா். இந்தக் குழந்தைகளை லட்சுமியின் சகோதரரான மாற்றுத்திறனாளி முருகப்பா என்பவா் பாதுகாத்து வந்தாா். இவா்கள் அனைவரும் தெருவோரம் கிடக்கும் பேப்பா் குப்பைகளையும், கண்ணாடி பாட்டில்களையும் சேகரித்துப் பிழைப்பு நடத்தி வந்தனா்.
ஆதரவற்ற நிலையில் இருந்து இந்தக் குழந்தைகள் குறித்து அறிந்த பொதுமக்கள், தேன்கனிகோட்டை வட்டாட்சியா் இளங்கோவுக்கு தகவல் அளித்தனா். அந்தத் தகவலின் அடிப்படையில் வட்டாட்சியா் இளங்கோ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அவா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கி கொடுத்தாா். அதன் பின் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் அவா் தகவல் அளித்தாா்.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணன், மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் காயத்ரி நேரில் வந்து குழந்தைகளை மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்பு கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்தில் சோ்த்தனா். அதிகாரிகளின் இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினா்.