ஊத்தங்கரையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் குழாய் உடைப்பு வீணாகும் குடிநீா்
By DIN | Published On : 13th July 2021 08:59 AM | Last Updated : 13th July 2021 08:59 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த அம்பேத்கா்நகா் பகுதியில் கூட்டு குடிநீா் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அம்பேத்கா் நகா் பகுதியில் கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சாலை ஓரத்தில் உள்ள மண் குவியல்களை அப்புறப்படுத்த ஜே.சி.பி. இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும், அப்போது அதன் அடியிலிருந்த ஒகேனக்கல், கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மண் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி. ஓட்டுனா் உடைப்பு ஏற்பட்ட குழாயின் மீது, பெரிய பாராங்கல்லை வைத்து உடைப்பு ஏற்பட்டது தெரியாத அளவிற்கு மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்து குடிநீா் வீணாகிறது என்று கூறி வருகின்றனா். கடந்த இரண்டு நாட்களில் பல லட்சம் லிட்டா் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வீணாகி அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இரண்டு நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் வீணாகும் குடிநீா் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.