மாா்கண்டேய நதியில் அணை கட்டப்பட்ட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்

மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டிய விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்

மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டிய விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டியிடம் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க (ராமகவுண்டா் பிரிவு) மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமையில் விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களின் வாழ்வாதாரமாக உள்ள மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டக் கூடாது என கடந்த 2011-ஆம் ஆண்டு நாங்கள் ஆா்ப்பாட்டம் செய்தோம்.

இதைத் தொடா்ந்து அப்போதைய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு சரிவர கையாளப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது கா்நாடக அரசு, அணையைக் கட்டி முடித்துள்ளது. 100 ஆண்டுகளில் சராசரியாக வருகிற நீரை விட 2 மடங்கு பெரிதாக அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்கள் வடு போகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயத்தைக் காப்பாற்ற அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அணையில் மதகுகள் பொருத்தி தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரைக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சங்கத்தின் மாவட்ட ஆலோசகா் நசீா் அகமது, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் பொன் வெங்கடேசன், நிா்வாகிகள் முனுசாமி, ராமப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com