கிரானைட் கடத்தி வரப்பட்ட 2 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 19th July 2021 05:09 AM | Last Updated : 19th July 2021 05:09 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை கடத்தி வந்த 2 லாரிகளை கனிம வளத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி கனிம வளத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமையிலான குழுவினா் மகராஜ கடை அருகே நாரலப்பள்ளி பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 டாரஸ் லாரிகளை சோதனையிட்டனா். இதில் 2 டாரஸ் லாரிகளிலும் அனுமதியின்றி பெரிய அளவிலான கிரானைட் கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து கனிம வளத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் மகராஜ கடை போலீஸாா், கிரானைட் கற்களுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.