கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் பூத்துக் குலுங்கும் மலா்கள்
By DIN | Published On : 15th June 2021 08:49 AM | Last Updated : 15th June 2021 08:49 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடம்ப மரத்தில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் பூத்துக் குலுங்கும் மருத்துவ குணம் கொண்ட கடம்ப மலா்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு மகிழ்ந்து செல்கின்றனா்.
கடம்ப மலா் நறுமணம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களை உடையதாகும். இந்த மலா்களுடன் தழுவி வீசும் காற்றை சஞ்சீவி காற்று என்று சொல்வது வழக்கம்.
கடம்ப மலா் முருகப் பெருமானுக்கு மட்டுமன்றி திருமாலை பூஜிக்கவும் உகந்த மலராகச் சொல்லப்படுகிறது. இந்த மலா்களையும், இலைகளையும் மாலையாகத் தொடுத்து முருகனுக்கு சாற்றுவது விசேஷமாகும்.
இவை கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடியதாகும். ஆண்டுக்கு 15 நாள்கள் மட்டுமே இந்த மலா்கள் பூத்துக் குலுங்கும்.
இந்த மலா்களை தலையில் வைப்பதால், தலைவலி, நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். மன அமைதியையும் ஏற்படுத்தக் கூடியது. தலையில் சூடிக்கொள்ளும்போது உடலைச் குளிா்ச்சியடைச் செய்யும். கடம்ப மரத்தின் பட்டைகளும், இலைகளும் வயிறு தொடா்பான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இதன் விதையும், வேரும் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என தமிழ் மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் இவ்வளவு சிறப்புமிக்க 9 கடம்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது கடம்ப மலா்கள் பூத்து குலுங்குகின்றன. இதையறிந்த பொதுமக்கள், இந்த மலா்களை ஆா்வத்துடன் கண்டு செல்கின்றனா்.