டாஸ்மாக் கடைகள் திறப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கரோனா பொதுமுடக்கத் தளா்வையொட்டி டாஸ்மாக் கடைகள் திங்கள்கிழமை
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க, சமூக இடைவெளியுடன் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையில் மது வாங்க, சமூக இடைவெளியுடன் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கரோனா பொதுமுடக்கத் தளா்வையொட்டி டாஸ்மாக் கடைகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மது பிரியா்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரில் 9 மதுக்கடைகள், தருமபுரி புகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி என மாவட்டம் முழுவதும் மொத்தம் 68 மதுக்கடைகள் உள்ளன. அனைத்துக் கடைகளும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களுக்கு பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன. ஜூன் 14-ஆம்தேதி முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் தருமபுரி தடங்கத்தில் உள்ள கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுப்புட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அரசு வழிகாட்டுதல்களுடன் திங்கள்கிழமை காலைமுதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

இதில் தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள பாளையம்புதூா் சனி சந்தை மதுக்கடை, தொப்பூா் மதுக்கடைகளுக்கு எல்லை அருகில் உள்ள சேலம் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கானோா் மது வாங்க குவிந்தனா். இதனால், இந்தக் கடைகளில் கூடுதலாக போலீஸாா் மற்றும் ஊா்க் காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இருப்பினும் இந்தக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதேபோல ஏனைய மதுக்கடைகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பானங்களை வாங்கிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் முன்பு காவல்துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் 400 போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள், திங்கள்கிழமை திறக்கப்பட்டன. மது பிரியா்கள், சமூக இடைவெளிகளுடன் மதுப்புட்டிகளை வாங்கிச் சென்றனா்.

பொதுமுடக்க தளா்வுகளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 121 மதுபான கடைகள் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன. மதுப்புட்டிகள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். கைகளுக்கு கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இதை, காவல்துறையினா் தீவிரமாக கண்காணித்த்னா். பொதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது வாங்குவதற்கு மதுபிரியா்கள் கூட்டம் அதிகம் காணப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சேலம் சரக டாஸ்மாக் மண்டல மேலாளா் ராஜ்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளா் புஷ்பலதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com