மயிலாடும்பாறையில் அகழ்வாய்வுப் பணி தொடக்கம்
By DIN | Published On : 26th March 2021 08:57 AM | Last Updated : 26th March 2021 08:57 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியை அடுத்த மயிலாடும்பாறையில் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வுசெய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆகும். நம்முடைய முந்தைய சமுதாயம் விட்டுச் சென்ற தடயங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறுபதிவு செய்ய தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம் பொருள்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து, வரலாற்றுக்கு மற்றும் ஓா் ஆய்வு நெறியைத் தொல்லியல் தருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மணலூா் என 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் அகழ்வாய்வு தொடங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில் மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநா் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலா்கள் பரந்தாமன், வெங்கட குரு பிரசன்னா மற்றும் தொல்லியல் துறை மாணவ, மாணவியா் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அகழாய்வு இயக்குநா் சக்திவேல் தெரிவித்ததாவது:
இங்குள்ள மலையில் மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து தற்போது, முறையான அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
அதில், முன்னோா்கள் இங்கு எந்த வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனா். உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவா்கள் எந்த இனக்குழுவைச் சோ்ந்தவா்கள் என்பதை இங்கு கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு டி.என்.ஏ. சோதனை செய்து கண்டறியப்பட உள்ளது. முறையான வனத் துறை அனுமதி கிடைத்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கிழக்குத் தொடா்ச்சி மலையில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வுசெய்து வரும் சா்மா பவுண்டேசன் என்ற அமைப்பின் பொறுப்பாளா் சாந்தி பாப்பு தலைமையில் ஆராய்ச்சி மாணவா்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டனா். அவா்கள், பாறை எப்படி உருவானது. அவற்றின் வயது என்பது குறித்து ஆய்வு செய்தனா். மயிலாடும்பாறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அகழாய்வு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளியை அடுத்த மயிலாடும்பாறையில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணி.