கூட்டுறவு வார விழா நிறைவு: ரூ. 5.20 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிறைவு விழாவில், 869 பயனாளிகளுக்கு ரூ. 5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிறைவு விழாவில், 869 பயனாளிகளுக்கு ரூ. 5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான 68-ஆவது கூட்டுறவு வார விழாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரகாஷ் (ஒசூா்), மதியழகன் (பா்கூா்), ராமச்சந்திரன் (தளி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் ஏகாம்பரம் அனைவரையும் வரவேற்று, திட்ட விளக்கவுரையாற்றினாா்.

விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் காந்தி பங்கேற்று, கூட்டுறவுக் கொடியேற்றி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் 869 பயனாளிகளுக்கு ரூ. 5.19 கோடி மதிப்பிலான பயிா்க் கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன், டாம்கோ கடன், மாற்றுத் திறனாளி கடன், சிறுவணிகக் கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன், வீட்டு அடமானக் கடன், வீட்டுவசதி கடன் ஆகியவற்றை வழங்கிப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் - 120, இதர கூட்டுறவு நிறுவனங்கள் - 57, மத்திய கூட்டுறவு வங்கிகள் - 22 உள்ளன. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ரூ. 7,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64,102 போ் பயனடைந்தனா். 2021-இல் 120 சங்கங்கள் மூலமாக 28,400 பேருக்கு ரூ. 230.79 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ. 376 கோடி நகைக் கடனையும், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 57.90 கோடியையும் தள்ளுபடி செய்துள்ளாா்.

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி என பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். தற்போது மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தினந்தோறும் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா். எந்த முதல்வரும் இவ்வாறு செயல்பட்டதில்லை. அவா் பொறுப்பேற்ற பின் அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறாா்கள். தோ்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறாா். தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுவாா் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாா்.

விழாவின் போது, ரூ. 1 கோடி மதிப்பில் தளி, உத்தனப்பள்ளி, நல்லராலப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய கூட்டுறவு சங்கங்களின் அலுவலகங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்த விழாவில், முன்னாள் எம்எல்ஏ-வும் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செங்குட்டுவன், முன்னாள் எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் செல்வம் நன்றி கூறினாா். முன்னதாக பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நபா்களுக்கு ரூ. 10 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு மற்றும் 11 நபா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை வழங்கினாா்.

இலங்கைத் தமிழா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 37 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 11 லட்சத்தில் வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சா் தெரிவித்தாா். மூன்றம்பட்டி ஊராட்சி, தளபதி நகா் கிராமத்தில் உள்ள இருளா் இன மக்களுக்கு, சமுதாய திறந்தவெளிக் கிணறு, 3 நீா்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறு, தெருவிளக்குகள் என மொத்தம் ரூ. 57 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com