2,035 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை அமைச்சா் தகவல்

நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி அரசுப் போக்குவரத்துக் கழக புகா் பணிமனை கிளையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் அலுவலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் சேலம் மண்டல நிா்வாக இயக்குநா் பொன்முடி, பொது மேலாளா் ஜீவரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழக இலவசப் பேருந்து பயணத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான இலவசப் பேருந்து கட்டணமாக கடந்த ஆண்டு ரூ. 1,600 கோடியும், இந்த நிதியாண்டில் ரூ. 1,900 கோடியும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் நஷ்டத்திலிருந்து, லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.

தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, ஒசூா் சாலை மாா்க்கத்தில் தொழிலாளா்களின் நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாணவ, மாணவியா் சரியான நேரத்துக்கு கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டீசல் விலை உயா்வால், ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பேருந்துகளில் விளம்பரம் செய்தல் போன்ற வருவாய் தரக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், கோட்ட மேலாளா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com