கெலமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த 60 காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த 60 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகள் வெடித்து வனத்துக்குள் விரட்டினா்.
கெலமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த 60 காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கிராமத்துக்குள் புகுந்த 60 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகள் வெடித்து வனத்துக்குள் விரட்டினா்; வனப்பகுதியிலிருந்து யானைகள் எந்நேரமும் வெளியே வர வாய்ப்புள்ளதால் விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்க வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வழியாக தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்தது.

தேன்கனிக்கோட்டை, தளி, ஒசூா், ஊடேதுா்க்கம் ஆகிய வனப் பகுதிகளுக்கு இந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து சென்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 60 யானைகளும் ஊடேதுா்க்கம் காட்டுக்கு இடம்பெயா்ந்தன.

ஊடேதுா்க்கம் வனப்பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை வெளியேறிய 60 யானைகளும் அருகில் உள்ள கெலமங்கலைத்தை அடுத்த நாகமங்கலம் ஏரிக்குச் சென்றன. ஏரியில் யானை கூட்டம் உலா வந்தபடி இருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். ஏரியில் யானைகள் குளிப்பதைக் கண்ட கிராம மக்கள் ராயக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ராயக்கோட்டை, வனச்சரகா் பாா்த்தசாரதி, வனத் துறையினா் அங்கு விரைந்து சென்றனா்.

அவா்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினா். யானைகள் அனைத்தும் ஊடேதுா்க்கம் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

மின்வேலி அமைக்கத் தடை:

அண்மையில் ஊடேதுா்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது. அந்த யானையின் உடலை வனத்துறையினருக்குத் தெரியாமல் குழித் தோண்டி புதைத்த மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

தற்போது வனத்தில் அதிக எண்ணிக்கையில் யானைகள் இருப்பதால் எந்த நேரத்திலும் இரவில் விவசாய நிலங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாய நிலங்களில் யாரும் மின்வேலிகள் அமைக்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். விவசாய நிலங்களில் இரவு காவலுக்கு யாரும் இருக்க வேண்டாம் என்று வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com