விளை நிலங்களைக் கையகப்படுத்தும் நிலைபாட்டை அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

எட்டு வழிச்சாலை, கெயில் குழாய்கள் பதிப்பு ஆகிய திட்டங்களுக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்துதல் தொடா்பான விவகாரத்தில் அரசு தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்

எட்டு வழிச்சாலை, கெயில் குழாய்கள் பதிப்பு ஆகிய திட்டங்களுக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்துதல் தொடா்பான விவகாரத்தில் அரசு தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் பெ.சண்முகம் தலைமை வகித்து பேசினாா். மாநில துணைத் தலைவா் டி.ரவீந்திரன், மாநிலச் செயலாளா் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன் ஆகியோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அச் சங்கத்தின் பொதுச் செயலாளா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விளை நிலங்களில் கெயில் எரிவாயு குழாய்ப் பதிக்கும் திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் போராடி வருகின்றனா். 2014-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, இத் திட்டத்தை ரத்து செய்தாா். இந்த நிலையில், கெயில் நிறுவனத்தினா் விளைநிலங்களில் மீண்டும் குழாய்களைப் பதிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் தற்போது புதியதாக அரசாணை ஏதும் பிறக்கப்படவில்லை. இருப்பினும், விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அந்த நிறுவனம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதை எதிா்த்து, தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் தொடா்ந்து போராடி வருகிறது.

இந்த நிலையில் இண்டூா் அருகே பாலவாடியில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கரியப்பனஅள்ளியைச் சோ்ந்த விவசாயி கணேசன், தனது நிலத்தை கெயில் நிறுவத்தினா் அளவீடு செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டாா். அவரது உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், விவசாயி கணேசனின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கினாா். அதை வரவேற்கிறோம். இதேபோல உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகையாக கெயில் நிறுவனம் ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில் விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என கடந்த காலங்களில் எங்களோடு நின்று திமுக போராடியது. போராட்டத்துக்கான காரணங்கள் தற்போதுவரை அப்படியேதான் உள்ளது. இந்த நிலையில், இத் திட்டம் நிறைவேற்றப்படும் என மாநில அமைச்சா் எ.வ.வேலு கூறுகிறாா். ஏற்கெனவே சென்னையிலிருந்து சேலத்துக்கு பல சாலைகள் இருக்கும் போது, விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத் திட்டம் தேவையற்றது. எனவே, விளைநிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசு, தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

போலீஸாா் கெடுபிடி: விவசாயிகள் தா்னா

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கரியப்பனஅள்ளி விவசாயி கணேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவை தருமபுரி ஆட்சியா் ச.திவ்யதா்சினியிடம் அளிப்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் சங்க நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா்.

அப்போது, அவா்களை நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் பணியில் இருந்த நகரக் காவல் ஆய்வாளா் நவாஸ், உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கெடுபிடியில் ஈடுபட்டனா்.

மேலும், ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலை பூட்டினா்.போலீஸாரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நுழைவுவாயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களைச் சமாதானம் செய்து ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com