‘தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன்பெறலாம்’

தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன்பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
‘தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன்பெறலாம்’

தரிசு நிலங்களை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி பயன்பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட குட்டூரில், ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், வேளாண் இடுபொருள்கள், மருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழகத்தில் ஊராட்சிகள் முழு ஆற்றலுக்கேற்ப வளா்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில், ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் வேளாண், உழவா் துறை, வேளாண் பல்கலைக்கழகம், ஊராட்சி, வருவாய் பேரிடா் மேலாண்மை துறை உள்ளிட்ட பல துறைகள் பங்குபெற்றுள்ளன. தரிசு நிலங்களை தொகுப்பாக சாகுபடிக்கு கொண்டு வருதல், பாசன நீா் ஆதாரங்களை உருவாக்குதல், சூரிய மின்சக்தி மோட்டாா்களை தொகுப்பு நிலங்களில் அமைத்தல், நுண்ணீா்ப் பாசனம் அமைத்தல், வேளாண் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், கால்நடை நலன்காத்து பால் உற்பத்தியைப் பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிா் கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டப் பணிகள் இதில் அடங்கும்.

தரிசு நில மேம்பாடு, பயிா்கள் உற்பத்தி பெருக்குதல், மானாவாரி சாகுபடியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. தோட்டக்கலைத் துறை சாா்பில் பழைய மா தோட்டம் பராமரிப்புக்காக ரூ. 20,000 மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை சீரமைத்து பயன்பெறலாம் என தெரிவித்தாா்.

இதில், வேளாண் துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ் உள்பட அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை, மூன்றம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி விதைச்சான்று உதவி இயக்குநா் அருணன் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவப்பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினா் குமரேசன், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூபாலன் ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினா்.

சிங்காரப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், அட்மா திட்டத் தலைவா் அறிவழகன், கெங்கப்பிராம்பட்டி ஊராட்சியில் மாவட்டக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று துறை, வேளாண் விற்பனை துறை, வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com