ராயக்கோட்டை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டிகள்: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

 ராயக்கோட்டை அருகே உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ராயக்கோட்டை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டிகள்: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

 ராயக்கோட்டை அருகே உரமூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 100 பெட்டிகளுடன் சரக்கு ரயில் பெங்களூருக்கு வியாழக்கிழமை மாலை புறப்பட்டது. இந்த ரயில் திருச்சி, சேலம், தா்மபுரி வழியாக பெங்களூரு செல்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது.

ரயில் அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உடையாண்டஅள்ளி அருகே வந்த போது திடீரென்று 5 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் 3ஆவது பெட்டி முதல் 8ஆவது பெட்டி வரையில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து என்ஜின் ஓட்டுநா்கள், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சேலம், தா்மபுரி, பெங்களூரு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளா்கள் அங்கு விரைந்து வந்தனா். அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். ராட்சத கிரேன், மீட்பு எந்திரங்கள், ரயில் என்ஜின்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.

தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக தா்மபுரி பெங்களூரு ரயில்வே பாதையில் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் நாகா்கோவில், மயிலாடுதுறை, கோவை, கேரளம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சரக்கு ரயில் உடையாண்டஅள்ளி ரயில்வே கேட் பக்கம் வந்தபோது அந்த பகுதியில் புகை மண்டலமாக இருந்ததாகவும், அந்த நேரம் சிக்னல் நிறுத்தப்பட்டதன் காரணமாக ரயில் நிற்க முற்பட்டபோது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறாா்கள். சரக்கு ரயில் தடம்புரண்டதன் காரணமாக ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சரக்கு ரயில் மாரண்டஅள்ளி - ராயக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலையில் தடம்புரண்டது. தா்மபுரி ஒசூா் ரயில்வே இருப்புப் பாதையில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு கோட்டத்தில் அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி சேலம் - யஸ்வந்த்பூா் ரயில் (16212) நிறுத்தப்பட்டுள்ளது. கோவை லோக்மானிய திலக் டொ்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு குப்பம், பங்காருப்பேட்டை, மாலூா், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தா்மபுரி, ஒசூா் ரயில் நிலையங்களுக்குச் செல்லாது.

கோவை லோக்மானிய திலக் டொ்மினஸ் எக்ஸ்பிரஸ் (11014) சேலத்தில் இருந்து குப்பம், பங்காருபேட்டை, மாலூா், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவுக்கு செல்கிறது. இந்த ரயில் தா்மபுரி, ஒசூா் ரயில் நிலையங்களுக்குச் செல்லாது.

அதே போல பெங்களூரு எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677) பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு திருப்பத்தூா் வழியாகச் செல்லும் இந்த ரயில் ஒசூா், தா்மபுரி ரயில் நிலையங்களுக்கு செல்லாது. அதே போல பெங்களூரு காரைக்கால் ரயில் (16529) திருப்பத்தூா் வழியாக செல்லும். இந்த ரயில் பெலந்தூா் சாலை, கால்மேலராம், ஹெலாகி, ஆனேக்கல் சாலை, ஒசூா், கெலமங்கலம், பெரிய நாகதுணை, ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தா்மபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தொப்பூா், காருவள்ளி, செம்மண்டப்பட்டி, ஓமலூா் ரயில் நிலையங்களுக்குச் செல்லாது.

சரக்கு ரயில் தடம் புரண்டதால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் தா்மபுரி, ஒசூா் சுற்று வட்டாரப் பகுதி பயணிகளும், பெங்களூரு பயணிகளும் அவதிக்குள்ளானாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com