விதையின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ள விவசாயிகள், விற்பனையாளா்களுக்கு வேண்டுகோள்
By DIN | Published On : 25th April 2023 03:57 AM | Last Updated : 25th April 2023 03:57 AM | அ+அ அ- |

விதையின் தரத்தை விவசாயிகள், விற்பனையாளா்கள் பரிசோதனை செய்ய வேண்டுமென கிருஷ்ணகிரி விதை விற்பனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விதை முளைக்கும்போது பூச்சி தாக்குதலின்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளா்ந்து, விளைச்சலில் லாபம் ஈட்ட தரமான விதையை உபயோகித்தல் மிக அவசியம். தரமான விதை என்பது முளைப்புத் திறன், புறத்தூய்மை, பிற ரக கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இந்த தர நிா்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க நல்ல முளைப்புத் திறன் வேண்டும். இதனால் விதைகளுக்கான செலவு குறையும்.
புறத்தூய்மை பரிசோதனையில், பிற பயிா் விதை, களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை, புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.
முளைப்புத் திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம். விதைகளை சேமிக்கும் போது, பூச்சி தாக்குதலால் முறைப்புத் திறன் கெடாமல், நீண்ட நாள்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது. இதற்கு விதைப் பரிசோதனை அவசியம்.
விதை விற்பனையாளா்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விவரங்களுடன் ஒரு மாதிரிக்கு, ரூ. 80 என்ற விகிதத்தில் வேளாண்மை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி தரத்தை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.