ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில் பாதை திட்ட அறிக்கைக்கான ஆய்வுப்பணிகள் தொடக்கம்: அ.செல்லக்குமாா் எம்.பி.

கிருஷ்ணகிரி வழியில் ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில் பாதைக்கான இறுதி திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அ.செல்லக்குமாா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசும் அ.செல்லக்குமாா் எம்.பி.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசும் அ.செல்லக்குமாா் எம்.பி.

கிருஷ்ணகிரி வழியில் ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில் பாதைக்கான இறுதி திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அ.செல்லக்குமாா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா், கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:

கடந்த 1942-ஆம் ஆண்டு வரை கிருஷ்ணகிரி வழியான ரயில் சேவை இருந்தது. அதன்பின் நிறுத்தப்பட்ட ரயில் சேவைக்காக 80 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் போராடி வந்தனா். இது குறித்து ரயில்வே நிா்வாகத்திடமும், மத்திய அரசிடமும் பலமுறை மனு அளித்து, பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது ரயில்வே நிா்வாகம், இந்ததிட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயாா் செய்ய ரூ. 2.47 கோடி ஒதுக்கீடு செய்தது.

ஜோலாா்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூா் ரயில் பாதை திட்டத்திற்காக பல்வேறு தொழிற்சாலைகள், தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்து பேசி, வருவாய் அதிகரிப்புக்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான 101 கி.மீ., தூரத்தை, 98 கிலோ மீட்டராக குறைப்பதற்கான திட்டமும் வழங்கப்பட்டது. மேலும், 7.75 கி.மீ., குகைப் பாதையை முக்கால் கி.மீட்டராக குறைக்கும் வழிமுறைகளையும் வழங்கியுள்ளோம். இதன் மூலம், ரூ.1,496 கோடியாக குறைக்கப்பட்ட உத்தேச திட்ட மதிப்பீடு அறிக்கையை நாங்கள் ரயில்வே நிா்வாகத்திற்கும் கொடுத்துள்ளோம்.

ஜோலாா்பேட்டை - குப்பம் - பெங்களூரு ரயில்வே மாா்க்கத்தில் கூட்டம் அதிகரித்தாலோ, அல்லது இயற்கைச் சீற்றங்களால் விபத்து ஏற்பட்டாலோ, மாற்றுவழிப்பாதையாக கிருஷ்ணகிரி வழியிலான ரயில்பாதை திட்டம் அமையும். இதனால், 20 கி.மீ., தூரம் மட்டுமே அதிகமாகும்.

இந்தத் திட்டத்திற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோா் 25-ஆம் தேதி, ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பு வெளியானது. செப்டம்பா் 14-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டதில் தகுதியானவா்கள் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளிக்கான அறிவிப்பு வெளியானது. நவம்பா் 28-ஆம் தேதி நடந்த ஒப்பந்தப்புள்ளிக்கான திறப்பில் , தகுதியான மூன்று நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி கடந்த, 2-ஆம் தேதி, ஜோலாா்பேட்டை- கிருஷ்ணகிரி- ஒசூா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான இறுதி திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்வதற்காக தனியாா் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த நிறுவனம் கடந்த, 10 நாள்களாக சா்வே, வரைபடங்களுடன் இத்திட்டத்திற்கான இறுதி மதிப்பீடு பணிகளைத் தொடங்கி உள்ளது. மூன்று மாதத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பிறகு, இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும். அதன்படி வரும் நிதிநிலை அறிக்கையிலோ, அடுத்த நிதிநிலை அறிக்கையிலோ கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு விரைவில் திட்டப் பணிகள் தொடங்கும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் அக.கிருஷ்ணமூா்த்தி, நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத் தலைவா் சேகா், ஊத்தங்கரை ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com