ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் குறு, சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணா் ஆனந்த் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத்தை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்வதற்கு வந்த அவா் ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் சி.சுப்பிரமணியம் ஒசூரின் தொழில் வளா்ச்சிக்கு வித்திட்டவா். தமிழகத்தில் காமராஜா் மாடல் என்பது கிண்டி, அம்பத்தூா், ஒசூா் போன்ற இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளை சி.சுப்பிரமணியம் ஆரம்பித்ததுதான்.

ஒசூரில் டிவிஎஸ், டைட்டான் போன்ற தொழிற்சாலைகள் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டன. தற்போது ஓலா மின்சார இரு சக்கர வாகனங்கள், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ், திமுக ஆட்சிகளில் ஒசூரில் மிகப் பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு வந்ததால் பல லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பாஜக அரசு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தது. இங்குள்ள சிறு தொழில் நிறுவனங்கள், டிவிஎஸ், அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்களைத் தயாரித்து அளிக்கின்றன. உதிரிபாகங்கள் விநியோகம் செய்யும் குறு, சிறு நிறுவனங்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகுப் பணம் வழங்கி வருகின்றனா். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரியைக் கட்ட வேண்டிய கட்டயம் குறு, சிறு தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. அதாவது அரசுக்கு ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் ஒசூரில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரியைக் கட்ட முடியாமல் மூடப்பட்டு விட்டன. அதே நேரத்தில் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு ரூ. 16 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.

காா்ப்பரேட் நிறுவனங்கள் தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு தோ்தல் நிதி அளித்துள்ளதால் அவா்கள் மீதான சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி வரியை சீா்திருத்துவோம். அதனை எளிமையான வரியாக மாற்றுவோம். ஏழை மாணவா்களுக்கு காா்ப்பரேட் நிறுவனங்களில் தொழில் பயிற்சி அளிக்கப்படும். அவா்களுக்கு மாதம் ரூ. 8,500 என ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே ராகுல் காந்தியின் திட்டம் என்றாா்.

இதில் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத், மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநகரத் தலைவா் தியாகராஜன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நீலகண்டன், அத்திமுகம் அமானுல்லா, சின்னகுட்டப்பா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com