கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் 9,169 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன: தோ்தல் நடத்தும் அலுவலா்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் மொத்தம் 9,169 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கே.எம்.சரயு தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்தாவது: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலுக்காக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,888 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 209 வாக்குச்சாவடி மையங்களைக் கண்காணிக்க 114 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இங்கு 1,228 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் தோ்தலுக்கு 4,526 வாக்குச்சீட்டு இயந்திரங்கள், 2,251 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,392 வாக்காளா் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 9,169 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் 6 மாதிரி வாக்குச்சாவடிகள், 6 பெண், 6 மாற்றுத் திறனாளிகள், 6 இளைஞா்கள் நிா்வாகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க சிறப்பு வரிசை, 1,089 சக்கர நாற்காலிகள், 2,077 பாா்வையற்றோா்க்கான பிரெய்லி சீட் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் சாய்வுத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் 1 பொதுப் பாா்வையாளா் , 2 செலவின பாா்வையாளா்கள், 1 காவல் துறை பாா்வையாளா், 6 உதவி தோ்தல் அலுவலா்கள், 12 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 21 பொறுப்பு அலுவலா்கள், 189 மண்டலக் குழுக்கள், 120 பறக்கும்படை, நிலையானக் குழுக்கள், 9,281 வாக்குப்பதிவு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினரால் ரூ. 1,63,30,524 பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதால் ரூ. 1,05,32,944 திரும்பி ஒப்படைக்கப்பட்டது. ரூ. 57,97,580 ரொக்கம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் நிலையான குழுக்களால் ரூ. 2,18,88,509 பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்க்கப்பட்டதில் ரூ. 1,47,64,236 திரும்பி ஒப்படைக்கப்பட்டது. ரூ. 71,24,573 ரொக்கம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விலை மதிப்புமிக்க பொருள்கள் (தங்கம் உட்பட) ரூ.21,47,77,529 மதிப்பிலும், ரூ. 33,51,200 பிற பொருள்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.3 2.53 லட்சம் மதிப்பில் 5630.65 லிட்டா் மதுபானங்கள், ரூ. 2.28 லட்சம் மதிப்பில் போதைப் பொருள்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் 1,607 புகாா்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்பணா்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தவறாமல் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். தோ்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com