கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அமைதியாக நிறைவு பெற்ற தோ்தல் பிரசாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரம் அமைதியான முறையில் புதன்கிழமை நிறைவு பெற்றது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. பொதுவாக தொகுதி முழுவதும் அமைதியான முறையில் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் திமுகவினா் தங்களது பிரசாரத்தை பழையபேட்டை கோட்டையிலிருந்து ஊா்வலமாகச் சென்று, வட்டச்சாலை அருகே நிறைவு செய்தனா். வட்டச்சாலையில் நடைபெற்ற பிரசாரத்துக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்துப் பேசியது: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா். அப்போது, திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசும்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி என்றாா். அதிமுகவினா் தங்களது பிரசாரத்தை கிருஷ்ணகிரி சாா் பதிவாளா் அலுவலகம் அருகே தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று, வட்டச் சாலையில் நிறைவு செய்தனா்.

பாஜக வேட்பாளா் சி.நரசிம்மன், தனது கூட்டணி கட்சியினருடன், நகரில் ஊா்வலமாக சென்று வாக்கு சேகரித்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி விரப்பன் கிருஷ்ணகிரி நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரம், எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com