போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

ஒசூா்: போா்க்கால அடிப்படையில் குடிநீா் குழாய் பணிகளை முடித்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

இதுகுறித்து தினமணிக்கு அளித்த பேட்டியில் ஆட்சியா்

கூறியதாவது:

ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. அப்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் செல்லும் பிரதான குடிநீா் குழாய் சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஓரிரு நாள்களில் முடிந்துவிடும். அதேபோன்று ஒசூா் உழவா் சந்தை பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனையும் போா்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்களுக்கு சீராக குடிநீா் வழங்கப்படும்.

தற்போது 10.5 எம்.எல்.டி. குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாளில் இந்தப் பணிகள் முடித்து 13.5 எம்.எல்.டி.குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

இதனைத் தவிர ஒசூா் மாநகராட்சியில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் சில ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து விட்டது. ஒசூா் மாநராட்சிப் பகுதியில் 3.80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 57 எம்.எல்.டி.குடிநீா் தேவை. ஒசூா் மாநகராட்சியின் முழுமையான குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com