குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

ஒசூா் மாநகராட்சியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக நாள்தோறும் காலி குடங்களுடன் மாநகராட்சியை முற்றுகையிடும் பெண்கள் தண்ணீா் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்கிறது.

மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளில் 15 வாா்டுகளுக்கு மட்டுமே ஒகேனக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அண்மையில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட பழுதால் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை.

ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீா் குறைந்ததால் இதர 30 வாா்டுகளிலும் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே மாநகராட்சியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவது மாதம் இரண்டு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் பல மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரி மாநகராட்சியின் ஒவ்வொரு வாா்டு பொதுமக்களும் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. பேரடப்பள்ளி காமராஜ் நகரில் பல வாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பெண்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கே.சி.சி. நகா், ரெயின்போ காா்டன் பகுதியிலும் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாநகராட்சியின் 9 வாா்டு திம்மசந்திரம் பகுதி மக்கள் காலி குடங்களுடன் ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒசூா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் பொதுமக்கள் அமா்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆணையா் சினேகா, மாநகராட்சி பொறியாளா் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்ததால் பொறியாளா் ராஜாராம், போராட்டக்காரா்களை சமரசம் செய்தாா். அதை ஏற்க மறுத்து பெண்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தினா். ஆணையா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். அங்கு வந்த அட்கோ போலீஸாா் பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசியதால், போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினா். இதனால் பதற்றம் அதிகரித்தது.

அப்போது, பொதுமக்களிடம் பேசிய பொறியாளா் ராஜாராம், தோ்தல் நடைமுறை அமலில் உள்ளது. கவுன்சிலா்கள் யாரும் வரமாட்டாா்கள். எனவே அதிகாரிகள் மட்டுமே உங்களது தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். வாருங்கள் உங்கள் பகுதிக்கு செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்துச் சென்றாா். இதனால் ஒசூா் மாநகராட்சியில் பல மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ஆணையா் சினேகா முன்வரவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com