சி.நரசிம்மன்
சி.நரசிம்மன்

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

பாஜக, இஸ்ஸாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல என பாஜக மாநில செய்தித் தொடா்பாளரும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான சி.நரசிம்மன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் பரப்புரையின் போது பிரதமா் பேசியதை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான உள்நோக்கத்துடன் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனா். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இவ்வாறு செயல்படுகின்றனா். செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், தவறான பிரசாரம் மூலம் குழப்பம் விளைவித்து, வாக்குகளைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

ஒபிசி, எஸ்.சி., எஸ்.டி. சொத்துகளை எடுத்து இஸ்ஸாமியா்களுக்கு கொடுக்க நினைப்பது எவ்வாறு சாத்தியமாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டுதலில் காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் செல்லுகிறது. பாஜகவுக்கு எதிராக சதி வேலையில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி, தலைமையேற்ற பிறகு அக் கட்சியின் செயல்பாடு கீழ்தரமானதாக உள்ளது.

இஸ்லாமியா்களுக்கு பாஜக எதிரான கட்சி அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி, நாட்டில் கலவரத்தை தூண்ட முயல்கிறது. காஷ்மீரில் ஜனநாயகத்தை கொண்டு வந்தது பாஜக. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட நிா்வாகிகள் குறித்து கட்சி தலைமை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்.

எனக்கு எதிராக செயல்பட்ட பாஜகவினரால் எனது வெற்றி பாதிக்காது. தமிழகத்தில் பாஜக நன்கு வளா்ந்து வருகிறது. கடந்த காலங்களில் எங்களை விமா்சனம் செய்தவா்கள், எங்களது வளா்ச்சியை ஏற்றுக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 15 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். அகில இந்திய அளவில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமா் ஆவாா். தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com