கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கெலமங்கலம் அருகே கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா்: கெலமங்கலம் அருகே கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் ( 37). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுமதி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனா்.

சுமதி ஜக்கேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். அதே நிறுவனத்தில் எம்.கொத்தூரைச் சோ்ந்த பாலகுமாா் (27) என்பவா் வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனா்.

இது ஸ்ரீதருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததையடுத்து, அவா்கள் சுமதிக்கு புத்திமதி கூறினா். ஆனால், சுமதி பாலகுமாருடனான தொடா்பை விடாமல் இருந்துள்ளாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒசூரில் உள்ள உறவினா் வீட்டில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக பெரியம்மாவுடன் சென்ற ஸ்ரீதரின் 9 வயது மகள் இரவு பெரியம்மா வீட்டிலேயே தூங்கி விட்டாா். ஸ்ரீதா் மகனும் வழக்கமாக அருகில் உள்ள தாத்தா வீட்டுக்கு இரவில் சென்று விடுவானாம்.

இந்த நிலையில், ஸ்ரீதரின் அண்ணன் சீனிவாசன் தம்பி வீட்டுக்கு வந்த போது, தம்பி படுக்கையில் பேச்சு, மூச்சின்றி இறந்து கிடந்துள்ளாா். மேலும், அவரது 2 கன்னங்களும் சிவந்த நிலையிலும், காதின் அருகில் ரத்தம் வழிந்தும், வலது கை விரல்களிலும் சிராய்ப்பு காயங்களும் இருந்தனவாம்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சீனிவாசன், இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து இது தொடா்பாக ஸ்ரீதரின் மனைவி சுமதியிடம் விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சுமதி பாலகுமாருடன் சோ்ந்து கணவரை கொலை செய்யது தெரிய வந்தது. இதையடுத்து, சுமதி, பாலகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com