‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

மண் வளத்தை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் பசுந்தாள் உரமிட வேண்டும் என ஒசூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ஒசூா்: மண் வளத்தை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் பசுந்தாள் உரமிட வேண்டும் என ஒசூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிக மகசூல் பெற பல்வேறு ராசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக் கொல்லிகள் பயிா்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை மண்ணில் இடும் போது மண்ணின் இயல் தன்மை, நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் அளவு குறைந்து விடுகிறது. எனவே, மண்ணின் வளத்தைப் பெருக்கிட பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கைப் பூண்டு சாகுபடி செய்யலாம். போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போது ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைத்து 30 முதல் 45 நாள்களுக்குள் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

கோடைப் பருவத்தில் விதைக்கப்படும் பசுந்தாள் பயிா் மூலம் நிலத்துக்குத் தேவையான 20 சதவீதம் தழைச்சத்து இயற்கையாகவே அதிகரித்து அடுத்து வரும் பயிருக்கும் எளிதில் கிடைக்கும். மேலும், மூடு பயிராக வளா்ந்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது. நீா் தேக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கிறது. களைகளின் பெருக்கம், களை வளா்ச்சி குறைகிறது.

பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால் கார மண்ணை மீட்டெடுக்க உதவுகிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் கரிம சத்து அதிகரிக்கிறது. மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிா்கள் வேகமாக பெருகும்.

எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிா்களான தக்கைப் பூண்டு, சணப்பை ஆகியவற்றின் விதைகளை ஒசூா் வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்தில் பெற்று விதைத்து மண்வளத்தை மேம்படுத்தி மகசூலைப் பெருக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com