ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ஒசூா் வட்டாரத்தில் 87 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிா் திட்டம்’ குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் அறிவுரை வழங்கி வருகிறாா்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி ஒசூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒசூா் வட்டாரத்தில் 8,000 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக நெல், ராகி உள்ளிட்ட தானியப் பயிா்களும் துவரை, கொள்ளு உள்ளிட்ட பயறு வகைகளும், நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்துப் பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பாண்டில் (2024-2025) ஒசூா் வட்டாரத்தில் உள்ள 87 வருவாய் கிராமங்களில் வேளாண்மைத் துறையின் கீழ் வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா்கள் மூலம் ‘ஒரு கிராமம் ஒரு பயிா் திட்டம்’ செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் எந்தப் பயிா் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அப்பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவா்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பாக, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 5 முதல் 10 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளையும் ஒரே விதமான பயிரைச் சாகுபடி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயிரின் விதைப்பு முதல் அறுவடை வரை பயிருக்கான நிலம் தயாரிப்பு, மண் பரிசோதனை, பாசன நீா் ஆய்வு, உயா் விளைச்சல் ரகங்கள், விதைநோ்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைகள், களை மற்றும் நீா் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் செயல்படுத்திட வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 15 முதல் 20 சதவீதம் மகசூலை அதிகரிக்க செய்வதே வேளாண்மைத் துறை அலுவலா்களின் நோக்கமாகும். மேலும், புனுகன்தொட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ‘ஒரு கிராமம் ஒரு பயிா் திட்டம்’ பற்றி 25 விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com