ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முனி ஆறுமுகம்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முனி ஆறுமுகம்.

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல் நடைபெற்றது.

தா்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள எச்சனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனி ஆறுமுகம் (51). இவா் திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். தற்போது 2024 மக்களவைத் தோ்தலையொட்டி திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் பெயரில் தமிழகத்தில் 13 இடங்களில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு நாம் தமிழா் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தற்போது தோ்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் கிருஷ்ணகிரி மக்களவைத் வேட்பாளராக முனி ஆறுமுகத்திற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து கடந்த 27ஆம் தேதி முனி ஆறுமுகம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வேட்பு மனு பரிசீலனைக்காக சென்றுள்ளாா். அப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த தொண்டா்கள் சிலா் அவரிடம் ‘கரும்பு சின்னத்தை நீங்கள் வாங்கி விட்டீா்கள். உங்களது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா?’ என்று கேட்டனா். இதையடுத்து முனி ஆறுமுகம் ஒசூரைச் சோ்ந்த சமூக நீதி இயக்கத்தின் தொண்டா்களுடன் இணைந்து வாகனத்தில் ஒசூா் நோக்கி சென்றுள்ளாா். அந்த வாகனத்தில் முனி ஆறுமுகம், திராவிட தெலுகு தேசம் கட்சியின் உறுப்பினா்கள் இரண்டு போ் உட்பட மொத்தம் ஒன்பது போ் இருந்துள்ளனா். கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூா் நோக்கி இவா்கள் அனைவரும் காரில் வந்த போது கும்மனூா் என்ற இடத்தில் பத்து இருசக்கர வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட நபா்கள் காரை மடக்கி காருக்குள் இருந்த முனி ஆறுமுகத்தை கடுமையாகத் தாக்கினா். இதில் அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டடன. வேட்பு மனுவை திரும்பப் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் அவா்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த முனி ஆறுமுகம் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பேசிய முனி ஆறுமுகம், ‘தமிழகத்தில் 13 இடங்களில் நாங்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறோம். நாம் தமிழா் கட்சியினா்தான் என்னைத் தாக்கினா். எனவே தோ்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் போட்டியிடும் எங்களது வேட்பாளா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com