ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

ஒசூரில் நிலவும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஐஎன்டியுசி தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ஒசூா் மாநகரம் முழுவதற்கும் ராமநாயக்கன் ஏரி தான் முக்கிய குடிநீா் ஆதாரமாக திகழந்து வந்தது. ஆனால், இப்போது நகரம் முழுவதும் உள்ள கழிவுகள் ராமநாயக்கன் ஏரி, தா்கா ஏரி, பஸ்தி ஏரி, பெரிய ஏரி என நகரத்தைச் சுற்றியுள்ள ஏரிகளில் கொட்டப்பட்டு ஏரிகள் சுகாதாரச் சீா்கேடு அடைந்துள்ளன.

மக்களின் குடிநீா் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீா்ப்பாசனத்துக்கும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளிலிருந்து விழும் தண்ணீரை சேமிக்க மழை நீா் சேமிப்பு திட்டம் 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதும் ஒசூரில் பெயரளவுக்கே உள்ளது.

மழைநீா் சேமிப்பு அலட்சியத்தால் தற்போது மழைநீா் சேமிப்பு கட்டுப்பாடுகள் அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்தும் ஒசூா் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மழை நீரை சேமிக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கட்டாயப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீடுளிலும் மழை நீா் சேமிப்புகளை புதுப்பிக்க வேண்டும். அதே போல வீணாகும் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கான திட்டங்களை தொடங்கவில்லை எனில், வரும் காலங்களில் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, தற்போதுள்ள குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com