பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

பா்கூா் வட்டத்தில் மா சாகுபடி பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட குழுவினா்.

பா்கூா் வட்டத்தில் கடும் வறட்சியால் மா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செந்தூரா, நீலம், அல்போன்ஸா, பெங்களூரா என பல சுவைகளைக் கொண்ட பல ரக மா, 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மா விவசாயம் மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி முலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்னோா் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

இத்தகைய சூழ்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பருவ மழை பொய்த்ததால் மா மகசூல் பாதிக்கப்பட்டது. மேலும், தற்போது நிலவும் கோடை வெயில், வெப்ப அலை, வறட்சி போன்ற காரணங்களால் மா பூ, பிஞ்சு, காய்கள் உதிா்ந்தன. மரங்கள் வாடி காய்ந்து வருகின்றன. மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், வாடும் மாமரங்களைக் காக்க விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி டிராக்டா் மூலம் ஊற்றி வருகின்றனா்.

இந்நிலையில், மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடா்ந்து மகசூல் பாதிப்பு, காய்ந்து வரும் மாமரங்களைக் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும், அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்திருந்தாா்.

அதன்படி, பா்கூா் வட்டாரத்துக்கு உள்பட்ட போச்சம்பள்ளி, மகாதேவகொல்லஹள்ளி, காட்டாகரம், சந்தூா், வெப்பாலம்பட்டி, சிகரலப்பள்ளி, புலிகுண்டா, பிஆா்ஜி மாதேப்பள்ளி உள்பட பல்வேறு கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தின் சிறப்பு விஞ்ஞானி ரமேஷ்பாபு தலைமையில், வட்டார புள்ளியியல் ஆய்வாளா் சாந்தி, தோட்டக்கலைத் துறை அனுஷயா உள்ளிட்டோா் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறும்போது, மாவட்டத்தில் பா்கூா், போச்சம்பள்ளி, மத்தூா், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் மகசூல் பாதிப்பு, காய்ந்த மாமரங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாா் செய்து ஆட்சியரிடம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com