ஆடி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் தேதியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆடி முதல் தேதியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
 சேலம் மாவட்டத்தில் ஆடி மாத திருவிழா மாரியம்மன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடி முதல் தேதி தேங்காய் சுடும் நிகழ்ச்சியும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
 அந்த வகையில் கடை வீதி, பட்டை கோயில், அம்மாப்பேட்டை, ஆனந்தா மார்கெட், குகை, தாதகாபட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் மற்றும் அழிஞ்சி குச்சிகள் விற்பனை ஜோராக நடைபெற்றன.
 அதேபோல தேங்காய் சுடுவதற்கு தேவையான நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, எள், அவல் உள்ளிட்டவைகளின் விற்பனையும் களைகட்டியது. திங்கள்கிழமை மாலை பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர்.
 ஆடி முதல் தேதியை முன்னிட்டு மாரியம்மன் கோயில்கள், ராஜகணபதி கோயில், சுகவனேசுவரர் கோயில், சித்தேஸ்வரா காளியம்மன் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 பரமத்தி வேலூர்
 பரமத்திவேலூர் பகுதியில் தலையாடியை முன்னிட்டு புதுமண தம்பதியினர் காவிரி ஆற்றில் நீராடியும், உறவினர்களுடன் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படைத்தும் தலையாடியைக் கொண்டாடினர்.
 ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி பின்னர் கோயிலுக்குச் சென்று வழிபடுவர். நிகழாண்டு ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு புதுமண தம்பதியினர் தலையாடி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
 காலையில் காவிரி ஆற்றுக்குச் சென்று நீராடி கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். மாலையில் உறவினர்களுடன் வீதியில் தேங்காய் சுட்டு அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்குப் படைத்து வழிபட்டனர்.
 ஆடி மாத பிறப்பை புதுமண தம்பதியர் மட்டுமல்லாமல் குழந்தைகளும், பெற்றோருடன் உற்சாகமாக வரவேற்றனர். பலர், அவுல், பொட்டுக் கடலை, நாட்டுச்சர்க்கரை, அரிசி, பாசிப் பருப்பு ஆகிய பொருள்களை தேங்காயில் அடைத்து குச்சியில் இணைத்து தீயில் சுட்டனர் (படம்).
 தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் பிரசாதங்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் ஆடியை வரவேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com