பைபிளை தமிழில் மொழிபெயர்த்த பீட்டர் பெர்சிவலின் 135 ஆவது நினைவு தினம்

பைபிளை தமிழில் மொழி பெயர்த்த பீட்டர் பெர்சிவலின் 135 ஆவது ஆண்டு நினைவு தினம் ஏற்காட்டில் கடைப்பிடிக்கப்பட்டது.
பைபிளை தமிழில் மொழிபெயர்த்த பீட்டர் பெர்சிவலின் 135 ஆவது நினைவு தினம்

பைபிளை தமிழில் மொழி பெயர்த்த பீட்டர் பெர்சிவலின் 135 ஆவது ஆண்டு நினைவு தினம் ஏற்காட்டில் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது கல்லறை மற்றும் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, நீலகிரி கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் ராஜ்கார்த்திக், பிலியூர் ராமகிருஷ்ணன், அருட்தந்தை பெனட் வால்ட்டர் மற்றும் பிரான்சிஸ் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறியதாவது:
 கிறிஸ்துவ மதத்தின் வேத நூலான பைபிளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் பீட்டர் பெர்சிவல் . இவர் ஒரு மத போதகர், மொழியியலாளர் மற்றும் ஒரு சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகப் பாடுபட்டார்.

பீட்டர் பெர்சிவல் 1803 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். மேரி பெலிச்சர் என்பவரை 1824 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், இலங்கைக்கு மத போதகராகச் சென்றார். அத்துடன் யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தார். தனது மனைவியுடன் இணைந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 24 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கல்வி சேவையில் ஈடுபட்டார்.

பைபிள்... கிறிஸ்துவ விவிலியத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் வேலையில் பீட்டர் பெர்சிவல் ஈடுபட்டார். அவருடைய முன்னாள் மாணவர் ஆறுமுக நாவலர் இப் பணிக்கு உறுதுணையாக இருந்தார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளை சென்னையில் அச்சடித்து எடுத்துக்கொண்டு இலங்கைக்கு இருவரும் சென்றனர். ஆறுமுக நாவலர் 8 ஆண்டுகள் பீட்டர் பெர்சிவலுடன் இணைந்து பணிபுரிந்தார். அதன் மூலம் பீட்டர் பெர்சிவல் தமிழ் மொழியில் மிகவும் புலமை பெற்றவராக மாறினார்.பீட்டர் பெர்சிவல் ஓர் எழுத்தாளராகவும் விளங்கினார். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பேசவும், நன்கு எழுதவும் தெரிந்தவராக இருந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என பல திறமைகளைக் கொண்டவராகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி கொண்ட தினவர்த்தமணி என்ற இதழை 1855 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்தார். இது தவிர, பதிப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட்டார்.

இந்தியக் கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழ் பழமொழிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1842 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இவர் ஆங்கிலம் - தெலுங்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதிகளையும் எழுதினார். ஒளவையாரின் பாடல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.

பீட்டர் பெர்சிவல் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பின் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குடியேறினார்.

இங்கு 1882 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று இயற்கை எய்தினார். இவருடைய கல்லறை ஏற்காட்டில் உள்ள ஹோலி டிரினிட்டி சர்ச்சில் உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com