மாவெளிபாளையம் தரைவழி பாலத்தால் 14 கிராம மக்கள் அவதி

சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையம் ரயில்வே தரைவழி பாலம் முன் போடப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்பு வளையத்தால் அந்த வழியாக


சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையம் ரயில்வே தரைவழி பாலம் முன் போடப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்பு வளையத்தால் அந்த வழியாகப் பேருந்துகள் செல்வது தடைபட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
மக்களின் நலன்கருதி மீதமுள்ள இரு தரைவழிப்பாலத்தையும் செப்பனிட்டு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 14 கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவெளிபாளையம் ரயில்வே நிலையத்தையொட்டி மாவெளிபாளையம், ஊஞ்சானூர், பச்சப்பட்டி, வளையசெட்டிபட்டி, உப்புப்பாளையம், வடுகப்பட்டி, பாப்பநாயக்கனூர், தட்டாம்பட்டி வேப்பம்பட்டி, சென்னாத்கல்கரட்டுப்புதூர்,  காஞ்சாம்புதூர்,   தாதவராயன்குட்டை,   நாயக்கன்வளவு, கருமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்தப் பகுதி மக்கள்  மாவெளிபாளையம் தரைவழி பாலம் மூலமே  அந்தந்த ஊர்களுககு சென்று வந்தனர். 
இந்த தரைவழி பாலத்தின் வழியாக சங்ககிரியிலிருந்து இரு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  பால் லாரிகளும்  இயக்கப்பட்டன.   
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மாவெளிபாளையம் தரைவழிபாலத்தின் இரு புறங்களிலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பாதுகாப்புத் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன. இதனால் அரசுப் பேருந்துகள், வாகனங்கள் இவ்வழியே செல்ல முடியாமல் சுற்றிச் செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
பால் லாரிகள், தனியார் கல்லூரி, பள்ளி  பேருந்துகள், ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்று வருகின்றன.  ரயில்வே பாதுகாப்பு தடுப்பு வளையத்தால் 14 கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் ரயில்வே பாதுகாப்பு தடுப்பு வளையத்தை அகற்றிட  ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும்,  மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாததால் தரைவழிப்பாலம் தற்போது மது அருந்துபவர்களின் கூடாரமாக உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் வாகனநெருக்கடி மற்றும் மக்கள் நலன்கருதி மீதம் உள்ள இரண்டு தரைவழி பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செப்பனிட்டு திறந்து விட வேண்டும் என ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com