புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரூ.14 கோடியில் 5 தளங்களுடன் அடுக்குமாடி வாகன நிறுத்தம்

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரூ.14.3 கோடியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம்


சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரூ.14.3 கோடியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் பேசினார். இயந்திரம் சாரா போக்குவரத்துக்கான முதன்மை திட்டம் தொடர்பாக சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் மேற்கொள்ளும் பொறியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை  வெள்ளிக்கிழமை துவக்கிவைத்து மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் பேசியது: சேலம் 10 லட்சம் பொதுமக்களைக் கொண்ட மாநகராட்சியாகும். மாநகராட்சிப் பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு  திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக சேலம் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.28.96 கோடி மதிப்பீட்டில் 7 இடங்களில் சீர்மிகு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தங்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்படும் பல்வேறு இடையூறுகளை களையும் வகையில் ஆனந்தா பாலம் அருகில்ரூ.13.50 கோடியிலும், விக்டோரிய வணிக வளாகம் அருகில் ரூ.7.85 கோடியிலும் 4 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  
இந்தநிலையில், கூடுதலாக சேலம் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்  ரூ.14.3 கோடியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பயிற்சி வகுப்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக்கான முதன்மை திட்டத்தின் கீழ், மாநகர் பகுதிகளுக்குள் பொதுமக்கள் நடப்பதற்கும் மற்றும் மிதிவண்டிகள் ஓட்டுவதற்கும் முறையான திட்டம் தயாரித்தல், பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தனித் தனி வழிகள் அமைத்தல், மோட்டார் வாகனங்களை தவிர்த்து பொதுமக்கள் பயணிப்பதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்,  இத்திட்டத்தின் மூலம் பொருளாதார மேம்பாட்டினை முறையாகக் கையாளுதல், சுகாதார மேம்பாட்டினை பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், நடைபாதைகள், மிதிவண்டி ஓடுதளம் மற்றும் பேருந்துப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, தனியார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகள் குறித்து பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் அ.அசோகன், மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பி.எஸ்.என்.எல், உள்ளூர் திட்ட குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, கல்வித் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com