சேலம் புறநகரில் ஜமாபந்தி முகாம்கள் நிறைவு: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காடையாம்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாம் நிறைவையொட்டி, 42 பயனாளிகளுக்கு ரூ. 60. 22 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை


ஓமலூர், ஜூன் 13: காடையாம்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாம் நிறைவையொட்டி, 42 பயனாளிகளுக்கு ரூ. 60. 22 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை வழங்கினார்.
காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலக 428-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ் தலைமையில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.
காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெப்பிலை, கேதுநாயக்கன்பட்டி புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி முதல் நாளில் நடைபெற்றது.
2-ஆம் நாளில் செம்மாண்டப்பட்டி குறுவட்டத்தில் கொங்குப்பட்டி வடக்கு, கொங்குப்பட்டி தெற்கு, மரக்கொட்டை, மூக்கனூர், பூசாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற்றது. முகாம் நிறைவடைந்ததையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத்துறையின் சார்பில் 2018 - 2019 ஆண்டு கூட்டுப் பண்ணை திட்டத்தில் 12 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 60 லட்சம் ரூபாய்க்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகைக்கான உத்தரவும், சக்கர நாற்காலி ஒரு நபருக்கும், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அடையாள அட்டைகள் 8 நபர்களுக்கும், வருவாய்த் துறையின் சார்பில் 5 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும்  என  மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ. 60.22 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ் வழங்கினார். 617 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டன.
எடப்பாடியில்...
வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து 529 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், தகுதியுள்ள 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்குகொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர் பொதுமக்களிடம் நேரில் விசாரணை செய்து மனுக்களை பெற்றுக் கொண்டார். வியாழக்கிழமை நிறைவடைந்த ஜமாபந்தியில் 529 மனுக்கள்
பெறப்பட்டன.
வருவாய்த் துறையினரின் விசாரணையில் தகுதி வாய்ந்த 20 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள்  பரிசீலனையில் உள்ளதாக சமந்தப்பட்ட அலுவலர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கேசவன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன், துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கெங்கவல்லியில்...
கெங்கவல்லியில் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 492 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜன் கூறியதாவது:
கெங்கவல்லியில் ஜூன் 11,12,13 என மூன்று நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் உலிபுரம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம் ஊராட்சி ஊர்கள், ஒதியத்தூர், 74. கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, கடம்பூர் உள்ளிட்ட  ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று 492 மனுக்களை அளித்தனர்.
இதில் பட்டா மாறுதல் கேட்டு 4 மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளன. எஞ்சிய 488 மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
ஏற்காட்டில்....
 ஏற்காட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
தனித் துணை ஆட்சியர் சமுக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சாரதா ருக்மணி தலைமை வகித்தார். ஏற்காடு வட்டாட்சியர் எம். முருகேசன் முன்னிலை வகித்தார். ஏற்காடு தாலுகா-வுக்கு உட்பட்ட 67 கிராமங்களில் 9 வருவாய்க் கிராமங்கள் தரப்பில் 121 மனுக்கள் மூன்று நாள்களில் பெறப்பட்டன.
மனுக்களில் 7 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டன. ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஏற்காடு மண்டல துணை வட்டாட்சியர் ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தேவி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வாசுகி, நில அளவைத் துறை செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்ககிரியில்...
சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட 18 கிராமங்களுக்கான ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 160 மனுக்கள் பெறப்பட்டன.
தேவண்ணகவுண்டனூர், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூர், வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், சுங்குடிவரதம்பட்டி, கோட்டவருதம்பட்டி தணிக்கை செய்தார். பின்னர் 160 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் கே. அருள்குமார், வருவாய் ஆய்வாளர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கணக்குத் தணிக்கையின்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com