சேலத்தில் பிரசவத்தின் போது இளம்பெண் சாவு: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் இறந்ததைத் தொடர்ந்து,

சேலத்தில் பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் இறந்ததைத் தொடர்ந்து,  தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் இரும்பாலை கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன்.  ஹோமியோபதி மருத்துவரான இவருக்கும்,  அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
இதில் துர்கா சேலம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பயிற்சி பெற்று வந்தார்.  இந்த நிலையில்,  துர்கா கருவுற்றவுடன் சேலம் 3 சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.  பின்னர்,  சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துர்காவுக்கு சுகப் பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. 
அதன் பின்னர்,  ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதாகக் கூறி,  துர்காவின் கணவரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ரத்தம் ஏற்பாடு செய்து தருமாறு தெரிவித்தனர்.  
இதையடுத்து,  கடந்த இரு தினங்களில் மட்டும் 48 யூனிட் ரத்தம் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  அவருக்குத் தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்து வந்தது. 
இதுகுறித்து கணவரிடம் தகவல் தெரிவித்த மருத்துவர்கள்,  கர்ப்பப் பையை அகற்றிய பின்னரும் ரத்தப் போக்கு நிற்கவில்லை என்று கூறி,  அருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
பின்னர்,  அங்கிருந்து வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்த நிலையில்,  சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை துர்கா இறந்தார்.  இதனால், அதிர்ச்சியடைந்த துர்காவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்,  இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      மேலும், மருத்துவமனைக்கு முன்பு இருந்த கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமரசம் செய்திட முயற்சித்தனர்.  ஆனால், காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் காரை முற்றுகையிட்டனர்.  இதனால் பதற்றம் அதிகரிக்கவே, காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இளம்பெண்ணின் கணவர் உள்பட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதில் அலட்சியம் காட்டி, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் சத்யா,  இச் சம்பவம் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும்.  குழு அறிக்கையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com