ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததாக 98 வழக்குகள் பதிவு ரூ.41,750 அபராதம் விதிப்பு
By DIN | Published On : 04th April 2019 10:05 AM | Last Updated : 04th April 2019 10:05 AM | அ+அ அ- |

ரயில்களில் அபாய சங்கிலியை காரணமின்றி இழுத்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.41,750 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் ரயில்களில் அபாய சங்கிலியை தேவையின்றி இழுப்பது ரயில்வே சட்டம் 1989-இல் பிரிவு 141-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்துக்கு ஓராண்டு சிறையோ அல்லது ரூ.1,000 அபராதமோ அல்லது இரண்டுமே சேர்த்து வழங்கப்படும்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததாக 124 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 78 நபர்களிடமிருந்து ரூ.41,750 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் சக பயணி ஏறாமல் இருத்தல், செல்லிடப்பேசி உள்ளிட்ட உடமைகள் கீழே தவறி விழுதல், தண்ணீர் மற்றும் உணவு வாங்க கீழே இறங்கிய பயணி குறித்த நேரத்தில் ரயிலில் ஏற முடியாத காரணம், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறங்குவதை தவற விடுதல் போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை இழுக்கும் சம்பவங்கள் நிகழ்வதாக தெரியவந்துள்ளது.
இதனால் ரயில் சேவை குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க முடியாத நிலைஏற்படுகிறது. இதன் மூலம் பயணிகள் மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு பல்வேறு அசௌகர்யம் ஏற்படுகிறது. ரயில்களில் கேப்டன், பயணச் சீட்டு பரிசோதகர், ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில் பெட்டி உதவியாளரை நாடினால் பயணிகளுக்குத் தேவையானவற்றை செய்து தருவர். இதுதவிர ரயில்வே பாதுகாப்புப் படை உதவி மையம் 182-ஐ நாடலாம். காவல்துறை உதவி மையம் 1512 மூலம் பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு அணுகலாம். ரயில் பயணிகள் உதவி மையம் 138 மூலம் ரயில் சேவை உதவிகளை பெறலாம்.
எனவே, சாதாரண நிகழ்வுகளுக்காக ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்தலை தவிர்க்க வேண்டும். முறையான காரணங்களுக்காக இல்லாமல் அபாய சங்கிலியை இழுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.