வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்வதை கைவிடக் கோரி மனு

மக்களவைத் தேர்தலையொட்டி தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் வெள்ளிப் பொருள்களை பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வெள்ளி தொழில் பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும், பரிசு மற்றும் ஆதாரத்துடன் கூடிய உதவிகளை செய்வதைத் தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளிப் பொருள்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், வெள்ளி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்ய முடியாத அளவுக்கு பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 
இந்த நிலையில், சேலம் வெள்ளி பூ மிஷின் கைவினைஞர்கள் பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சிலர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர். அதில், தேர்தல் நேரம் என்பதால் தங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளி மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் வெள்ளி தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களின் தொழில் நலன் கருதி பறக்கும் படையினர் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மேலும், கடந்த கால மத்திய அரசின் நடவடிக்கைகளால் தங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com