"கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை'

தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் வந்தால் நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார். இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கடந்த ஆண்டில் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் பல பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வரப்பெற்றன.
சுற்றுச்சூழலில் கோடையில் வெப்ப அளவு அதிகரித்துள்ளதாலும், வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் மாணவர்களுக்குக் கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும்.  
மேலும், கோடை விடுமுறை என்பது மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவினர்களின் அவசியத்தைத் தெரிந்து கொள்ளவும், உறவுகளை மேம்படுத்திடவும்  ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
இதனால் மாணவர்களின் வாழ்வியல் விழுமியம் மேம்படும். எனவே, மாணவர்களின் நலன்கருதி, கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளி முதல்வர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. 
பெற்றோர்களிடமிருந்து பள்ளிகள் மீது புகார் வரப்பெற்றால் அதன் மீது எவ்வித காலதாமதமின்றி உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக புகார் தெரிவிக்க சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தொலைபேசி 0427 -2450254, 9489977200 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com