மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு

மக்களவைத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு

மக்களவைத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.18 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 
எனவே, அதற்கு பிறகு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், அவர்களைச் சார்ந்தோர்  செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியோடு தங்களது பிரசாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது. வேட்பாளர்கள், சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தர்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்காளர்களின் வாக்குச் சேகரிக்கும் விதமாக பயன்படுத்தக் கூடாது. 
தேர்தல் தொடர்பான பிரசாரங்கள், பயணங்கள் ஆகியவற்றுக்கு வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசார காலத்தில் அரசியல் கட்சியினர் முன்செல்லும் வாகனங்கள் வண்ண சுழல் ஒளி விளக்குகள் கொண்ட வாகனங்கள், சைரன் ஒலி எழுப்பும் வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
பாதுகாப்பு வாகனங்கள் அல்லது 10 வாகனங்களுக்கு மேலான தொடர் வாகனங்களாக செல்ல அனுமதி இல்லை.
வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ சாதி, சமூக, மத மற்றும் மொழி தொடர்பான வேறுபாடுகளை அதிகரிக்கும் விதமாகவோ, வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவோ எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. 
வாக்குச் சேகரிக்க சாதி, மத, இன உணர்வுகளின் அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கக்கூடாது. திருக் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது மற்ற பிரார்த்தனை கூடங்கள் ஆகியவைகளை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.
ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. அந்தந்தத் தொகுதி வாக்காளர்களைத் தவிர, மற்ற நபர்கள், வெளி ஆள்கள் யாரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. 
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றிலும் வெளி நபர்கள் யாரையும் தங்க வைக்கக் கூடாது.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து மனு வரப்பெற்றால் மாவட்ட அளவிலான அரசியல் கட்சி பிரதிநிதிகள் மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் தொடர்பான பயணம் மேற்கொள்ளும் விதமாக ஒரு வாகனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
இதுதொடர்பான செலவினங்கள், அரசியல் கட்சி சார்ந்த செலவினத்தில் சேர்க்கப்படும். வேட்பாளர்கள் செலவினத்தில் இச்செலவினம் சேராது. சேலம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் தொடர்பான பணப் பட்டுவாடாக்களைத் தடுப்பதற்காக, 99 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 33 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், சிறப்பு காவல் ரோந்துகள், இருசக்கர வாகன ரோந்துகள் ஆகியவை முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் 45 செலவின கூர்நோக்கு பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளுக்கு புறம்பான நடவடிக்கைகளைத் தடுத்து, உரிய  நடவடிக்கை எடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணப் பட்டுவாடா தொடர்பான புகார் வரப்பெற்றவுடன் ஒரு சில நிமிடங்களில் பறக்கும் படை குழுக்கள் சம்மந்தப்பட்ட இடத்துக்குச் சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக உரிய அறிவுரைகள் அக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பணப் பட்டுவாடா தொடர்பான முக்கியமான தகவல்கள் பெறும் விதமாக புலனாய்வுத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.  விதிமுறைகளுக்குப் புறம்பான நிகழ்வுகள் ஏதும் நடைபெற்றால் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-1984 -இல் தொடர்பு கொண்டு தகவல்களை உடனடியாக தெரிவிக்கலாம். 
ஆண்ட்ராய்டு செல்லிடபேசியில் சி-விஜில் செயலி மூலம் தேர்தல் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com