வேட்பாளர்களால் புறக்கணிக்கப்பட்ட மலை கிராம வாக்காளர்கள்?

 சேலம் மாவட்டம்,  மேட்டூர் அருகே வசிக்கும் வாக்காளர்கள் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது


 சேலம் மாவட்டம்,  மேட்டூர் அருகே வசிக்கும் வாக்காளர்கள் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
    தருமபுரி மக்களவைத்  தொகுதியில் உள்ள மேட்டூர் சட்டப்பேரவைத் தெகுதியில் உள்ளது பாலமலை ஊராட்சி.  சுமார் 5 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைமீது அமைந்துள்ள இந்த ஊராட்சியில் 33 குக்கிராமங்கள் உள்ளன.   பாதுகாக்கப்பட்ட குடிநீர்,  போக்குவரத்து,  சாக்கடை வசதி, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த ஊராட்சியில் 3,250 வாக்காளர்கள் உள்ளனர்.
    தருமபுரி  மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  ஆனாலும்,  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களோ, சுயேச்சைகளோ இதுவரை பாலமலை ஊராட்சி வாக்களர்களைச் சந்தித்து வாக்குக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார், யார் அவர்களின் பெயர் என்ன என்பது கூட பலருக்குத் தெரியவில்லை.  ஆனாலும்,  ஏப்ரல் 18 ஆம் தேதி பாலமலை வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தயாராகி வருகின்றனர். 
     நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டே சட்டப்பேரவைத் தேர்தல் ஆனாலும், மக்களவைத் தேர்தலானாலும் சரி,  எந்த வேட்பாளரும் பாலமலைக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்டதில்லையாம். ஆனாலும்,  மலைவாழ் மக்கள் தங்களின் சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் வாக்களித்து வருகின்றனர்.  கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புவரை பாலமலைக்கு வாக்குப் பெட்டிகளும்,  வாக்குப் பதிவு இயந்திரங்களும் தலைச்சுமையாகவும்,  கழுதைகள் மீதும் கொண்டு செல்லப்பட்டன.  பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிராம மக்கள் மண் சாலை அமைத்துக் கொண்டனர்.  மாட்டு வண்டிகள் கூட இல்லாத பாலமலையில் தற்போது மோட்டார் சைக்கிள்களும்,  ஜீப்புகளும் செல்கின்றன. 
     சாலை வசதியின்றி நடந்து வந்த நிலை இருந்தபோதுதான் வேட்பாளர்கள் வரமுடியவில்லை.  தற்போது ஜீப்புகளிலாவது வந்து பார்த்தால், எங்களின் நிலையை அறிந்து  அடிப்படை வசதிகளைச் செய்வார்கள் எனப் பார்த்தோம், ஆனாலும், வரவில்லை.  ஒரு காலத்தில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை இந்த மலை கிராம மக்களின் வாக்குகள்தான் நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.   தேர்தலில் போட்டியிடுவது யார் என்று தெரியாமலேயே வாக்களிக்கும் மலை கிராவாசிகளுக்கு என்று விடிவு ஏற்படுமோ...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com