அடிப்படை வசதியில்லாத ஓமலூர் ரயில் நிலையம்: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஓமலூர் ரயில்வே நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் ரயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கழிப்பிடம், குடிநீர்,


ஓமலூர் ரயில்வே நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் ரயில் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கழிப்பிடம், குடிநீர், நிழற்கூடம் போன்றவை இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான பெண் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக ஓமலூர் ரயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக சேலம்-பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கும், சேலம் வழியாக கேரளம், கோவை, ஜோலார்பேட்டை,சென்னை,திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்வே இருப்புப் பாதை உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சேலம், ஈரோடு, மேட்டூர்,பெங்களூரு, மும்பை, ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயிலில் சென்று வருகின்றனர்.இந்த ரயில் நிலையத்தில் தினமும் ஆறு பயணிகள் ரயில் 12 முறை நின்று செல்கின்றன. இந்தநிலையில், ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கானஅடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழற்கூடை இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும்,பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அமரும் இருக்கைகள் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு வசதிகளும் இல்லாததால் ரயில் பயணிகள் மற்றும் பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, ஓமலூர் ரயில்வே நிலையத்திலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆனால், இந்த ரயில் நிலையத்தில் நிற்பதற்குக்கூட நிழல் இல்லை. பயணிகள் மழைக் காலங்களில் மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.மேலும், பெண்கள், குழந்தைகள் இயற்கை உபாதைகளுக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதனால், பயணிகள் நலன் கருதி உடனடியாக ஓமலூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, அடிப்படை வசதிகள் செய்யக் கோரி கோரிக்கைகள் வந்துள்ளன. அடிப்படை வசதிகள் செய்வதற்குத் தேவையான நிதி கேட்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com