நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் நகருக்குள் வனம் அமைக்கும் பணி துவக்கம்

 சேலம் தாதம்பட்டி பகுதியில் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்கும் பணியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணைச்


 சேலம் தாதம்பட்டி பகுதியில் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்கும் பணியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணைச் செயலாளர் வெ.திருப்புகழ் தொடங்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மண்டலம் தாதம்பட்டி பகுதியில், நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்கும் பணிகளை, மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணைச் செயலாளருமான வெ.திருப்புகழ் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக வெ.திருப்புகழ் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழைநீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலங்களில் நகர்புறங்களில் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு நகருக்குள் வனம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைளும்  மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.    
குறைந்த நிலப்பரப்பில் நம் பாரம்பரிய மரங்களை நடுவதால் அதிகபட்சமான கரியமில வாயுவை உள்வாங்கி ஆக்ஸிஜனை வாயுமண்டலத்தில் விடுவிக்கும், மழைநீரை அடர்ந்த வனங்களில் சேமிப்பது போல் நகர்ப்புற வனங்களில் மழைநீரை சேமித்திட முடியும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம் குறையாது. இந்த வனத்தில் உள்ள மரங்கள் பாதுகாப்பதால் வெப்பம் குறைக்கப்படுவதோடு மழைகாலங்களில் மண் அரிப்பும் தடுக்கப்படும். நகர்ப்புற வனங்களில் வைக்கப்படும் நாட்டு மரங்களுக்கு அதிக இடைவெளி தேவையில்லை என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்று நகருக்குள் வனம் கூடுதலாக அமைத்திட முடியும். 
அதனடிப்படையில் அம்மாபேட்டை தாதம்பட்டி பகுதியில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு,  2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு  நகருக்குள் வனம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. 
இந்த நகருக்குள் வனப் பகுதியினை ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வார்கள். 
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் பயன்படாத வகையில் உள்ள இடங்களை தேர்வு செய்து இதுபோன்ற நகருக்குள் வனங்கள் அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் அ.அசோகன், மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ஆர்.கவிதா, வி.பாஸ்கரன், ப.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com